தமிழ் சினிமாவில் எத்தனையோ கலைஞர்கள் தங்களது திறமைகளால், தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளனர். அந்த வகையில், தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக தடம் பதித்தவர் தான் அனிருத் ரவிச்சந்தர். கலைத்துறையை அடிப்படையாகக் கொண்டு விளங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் அனிருத். இவருடைய தந்தை ரவி ராகவேந்தர். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். விசுவின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தனது இளம் வயதிலேயே இசைக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டவர் அனிருத். கல்வி பயின்று கொண்டிருக்கும் போதே, இசைக்காக நேரம் ஒதுக்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இசைக்கல்லூரியில் படித்து அதற்காக பட்டம் பெற்றுள்ளார். புகழ்பெற்ற பல இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார். தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் திரைப்படத்திலேயே அனைவரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தனது இசையால், ரசிகர்களை கவர்ந்தார்.
நடிகர் தனுஷை பாட வைத்து இவர் வெளியிட்ட ஒய் திஸ் கொலவெறி பாடல் பட்டித்தொட்டி எங்கும் பரவியது. ஒரு படத்தில் கிடைத்த வெற்றியை வைத்து எப்படி முடிவு செய்ய முடியும் என பலர் கருத்து தெரிவித்து இருந்தாலும், அடுத்தடுத்த கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார். 10 ஆண்டுகள் கடந்து பயணம் மேற்கொண்டு வரும் அனிருத், தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய அனைத்து உச்ச நடிகர்களுக்கும் இசையமைத்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் முன்னேற்றத்திற்கு அனிருத் ஒரு மிகப்பெரிய காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. இசைக்கு ஏது பாரபட்சம் என்பதை நிரூபிக்கும் வகையில், இவர் கையில் எடுத்துக் கொள்ளும் அனைத்து படங்களையும் மிகப்பெரிய வெற்றிக்கு கொண்டு சென்றார். இவர் பணியாற்றும் படங்களில் கதாநாயகர்களுக்கு என தனி பாடல் கொடுத்து அவர்களை மேலும் ஒரு படிக்கு அழைத்துச் செல்வார் அனிருத். இவருடைய வெற்றியே அடுத்தடுத்த கட்டத்திற்கு இவரை அழைத்துச் செல்கிறது.
ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களுக்கும் பாடகராக இவர் மாறியுள்ளார். தமிழ் மொழி மட்டுமல்லாது மற்ற மொழிகளுக்கும் சென்று பல பாடல்களை இவர் பாடியுள்ளார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படத்திற்கு இசையமைத்து பாலிவுட்டிலும் தனது தடத்தை பதித்துள்ளார். இன்றைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய இசைப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளார்.
அனிருத் இசை என்றாலே அனைத்து இளம் தலைமுறைகளும் உடனே பாடல்களை கேட்க சென்று விடுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய ஆட்சி நடத்தி வருகிறார். இசையால் மிகப்பெரிய கூட்டத்தை உருவாக்கி தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் படையை உருவாக்கி வைத்திருக்கிறார் அனிருத். தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கக்கூடிய இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். இதற்கிடையே, பல்வேறு விருதுகளை தன் வசமாக்கி வரும் அனிருத், இன்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இசையின் பயணம் எப்படி முடிவற்றதோ அதேபோல இவருடைய வெற்றிப் பயணமும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். ராக் ஸ்டார் அனிருத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!