சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, இச்சம்பவத்தின் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, எஃப்.ஐ.ஆர் நகலையோ இணையத்தளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. பெண் வழக்கறிஞரான வரலட்சுமி என்பவர் உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், “இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் குறைபாடு உள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைதான போதிலும், பின்னணியில் யாரோ ஒருவர் ‘சார்’ இருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
அவர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார். அந்த கடிதத்தின் அடிப்படையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையின் போது பேசிய நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக இருக்கிறது. புகார் அளிக்க வந்த பெண்ணிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறும்போது, ஒரு காவல்துறை அதிகாரிகூட உதவி செய்ய முடியாதா என கேள்வி எழுப்பினர். அதேபோல பாதிப்பட்ட மாணவி மீது குறை கூறும் வகையில்தான் முதல் தகவல் அறிக்கை உள்ளது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தை விசாரிக்க 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்திடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த குழுவில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் இடம் பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கிடவும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தமிழக அரசு சார்ப்பில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி கேட்டுக்கொண்டார். மாணவியின் படிப்புக்கு எந்த இடையூறும் ஏற்படகூடாது என தெரிவித்த நீதிபதி தேர்வு கட்டணம், கல்வி கட்டணம் என எதுவும் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டார்.
Read more ; மேக்கப்புடன் தூங்கும் நபரா நீங்கள்..? இதனால் ஏற்படும் விளைவுகளை தெரிஞ்சுக்கோங்க..!