சென்னை மாநகர காவல் நிலையத்தில் 25 வயதான பெண் காவலர் ஒருவர் நுண்ணறிவு பிரிவு சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன் தினம் பணி முடிந்த அவர் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இருந்து தனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்து உள்ளார்.
அந்த மர்ம நபர் பின்பக்கமாகச் சென்று பெண் காவலரின் வாயை பொத்தி கீழே தள்ளி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நபரின் கையைக் கடித்த பெண் காவலர் கூச்சல் போட்டுள்ளார். தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது.
சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார். தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர்” என பதிவிட்டிருந்தார்.
Read more : உலகின் முதல் லிப்ஸ்டிக் எங்கு தயாரிக்கப்பட்டது.. அதை முதலில் பயன்படுத்தியது யார்..? – சுவாரஸ்ய தகவல் இதோ