கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கி உள்ளது.. அந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக சென்றுள்ளது.. பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து, முதல்முறையாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது..
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ பாஜகவுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பது தெரிகிறது.. பாஜக ஏன் தமிழகத்தில் வளரவில்லை என்பதற்கு இதுதான் காரணம்.. தமிழகத்தில் திராவிட கட்சிகளை தாண்டி பாஜக ஒருபோதும் வளராது.. அண்ணாமலை இன்று மத்தியில் தங்கள் ஆட்சி நடைபெறுகிறது என்ற தைரியத்தில் வாய்க்கொழுப்புடன் பேசுகிறார்..
பாஜகவில் ஒரு சில விஷ கிருமிகள் உள்ளனர்.. மோடி ஜி, நட்டா, அமித்ஷா இதை எல்லாம் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. பாஜகவில் இருந்து தொண்டர்களை வரவைத்து தான் அதிமுக வளர வேண்டும் என்ற சூழல் இல்லை, அதிமுக அந்தளவுக்கு மோசமான நிலையில் இல்லை.. ” என்று தெரிவித்தார்..
முன்னதாக பாஜக ஐடி விங் நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.. இதை தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் பலரும் அதிமுக இணைந்தனர்.. இதனால் பாஜக – அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் தான் ஜெயலலிதா போல் ஒரு தலைவர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதும், அதிமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. அண்ணாமலையின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.