கடந்த அக்டோபர் 20ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தின் முன் பாஜக கொடிகம்பம் அமைக்கப்பட்டதற்கு அப்பகுதியில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அதனை போலீசார் அகற்றினர். அப்போது அங்கிருந்த பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, அங்கிருந்த ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை பாஜகவினர் அடித்து உடைத்தனர். இதில், போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் ஒருவரின் மண்டை உடைந்த நிலையில், பாஜகவினரை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பாஜகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவரும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நண்பருமான அமர்பிரசாத் ரெட்டியை கடந்த அக்டோபர் 21ஆம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக என் மீது காவல்துறை முடிந்தால் கை வைத்து பாருங்கள், தொட்டுப்பார் என அமர்பிரசாத் ரெட்டி பேசும் வீடியோக்கள் வைரலாகி இருந்தன. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி தொடக்கவிழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை அகற்றி பிரதமரின் புகைப்படத்தை ஒட்டிய விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமர்பிரசாத் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை வரும் அக்டோபர் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.