பணப்புழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தலா ரூ.35 உயர்த்தி உள்ளது..
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் அதன் விலை பன்மடங்கு உயர்ந்து வருகிறது.. இதனால் பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் உள்ளிட்ட பல மாகாணங்களில் வசிக்கும் மக்கள் உணவுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.. இந்நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையை தலா ரூ.35 உயர்த்தி உள்ளது.. ஏற்கனவே விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் நேற்று தொலைக்காட்சி உரையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.. அப்போது பேசிய அவர் “ பெட்ரோல், டீசல் விலையை தலா ரூ.35 உயர்த்த முடிவு செய்துள்ளோம். மண்ணெண்ணெய் மற்றும் லைட் டீசல் விலை தலா ரூ.18 உயர்த்தப்பட்டுள்ளது, புதிய விலை உடனடியாக அமலுக்கு வரும்..” என்று தெரிவித்தார்..
கடந்த வாரம் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்ததாகவும், தற்போது சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலை 11 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஜனவரி 29ம் தேதி வரை பெட்ரோல் விலையை அரசு உயர்த்தவில்லை என்றும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையையும் குறைக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த விலை உயர்வுக்குப் பிறகு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.249.80 ஆகவும், அதிவேக டீசல் விலை ரூ.262.80 ஆகவும், மண்ணெண்ணெய் ரூ.189.83 ஆகவும், லைட் டீசல் விலை லிட்டருக்கு ரூ.187 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை பிப்ரவரியில் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..
இதனிடையே முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்த விலை உயர்வை விமர்சித்தார், “இறக்குமதி செய்யப்பட்ட அரசாங்கம், பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக தவறான முறையில் கையாண்டதால், எழை எளிய மக்கள் மற்றும் சம்பள வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்..” என்று கூறினார்.
இதே போல் பாகிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் அசாத் உமர் கூறுகையில், பணவீக்கத்தால் பொதுமக்கள் ஏற்கனவே சோர்ந்து போயுள்ளனர், அரசாங்கத்தின் நடவடிக்கை மக்களுக்கு “தண்டனை” என்று குறிப்பிட்டார்.