கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமி தனிமைப்படுத்தப்பட்டார். அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக பெல்லாரியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான காய்ச்சலும், தலைவலியும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமி, வேறு எங்கும் பயணிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. சிறுமி வசிக்கும் கோழி கேம்ப் பகுதியில் உள்ள 150 குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி, சோதனை நடத்தும் பணிகளை தொடங்கியுள்ளோம். எனவே, அருகிலுள்ள மாவட்டங்களில் சந்தேகத்திற்கிடமான வழக்குகள் குறித்து அரசாங்கம் எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தின் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு இது, இதனால் மக்கள் பீதி அடைய வேண்டாம், விரைவில் ஜிகாவைரஸில் இருந்து தப்பிப்பதற்கான வழிகாட்டுதலை சுகாதாரத்துறை வெளியிட இருக்கிறது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்துயுள்ளார்.
முன்னதாக புனேவில் உள்ள 67 வயது நபருக்கு கடந்த மாத இறுதியில் ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் நாசிக் பகுதியில் வசித்து வந்த நிலையில், நவம்பர் 6ம் தேதி புனே வந்திருந்த போது ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் காய்ச்சல், இருமல், மூட்டு வலி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு ஜிகா வைரஸ் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஜிகா வைரஸை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை கர்நாடக அரசு முடுக்கிவிட்டுள்ளது.