மாங்காடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மாங்காடு நகராட்சியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். 42 வயதான லட்சுமிபதி வேலைக்காக நடந்து சென்றபோது கால் தவறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், லட்சுமிபதியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழைநீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பின்றி நடந்து வந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே, சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த முத்துகிருஷ்ணன் (25) என்பவர், பணியை முடித்துவிட்டு ஜாபர்கான்பேட்டை பகுதியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், அங்கு மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்தார். குழியிலிருந்த கம்பிகள் குத்தியதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.