அரசு பள்ளிகளில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை கடைபிடிப்பதற்கும் அது தொடர்பாக உறுதிமொழியை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையரகம் சார்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்ற சுற்றறிக்கையில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஒவ்வொரு கல்வி ஆண்டின் முதல் வாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் தன்னம்பிக்கை வளர்த்தல், தன் சுத்தம் பேணுதல், போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் இருத்தல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சென்ற வருடம் அறிவித்திருந்தது.
அதன்படி எல்லா அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி ஜூன் மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது, அதேபோல் சுகாதாரத்துறை, காவல்துறை, சமூக நலம் உள்ளிட்ட துறைகளுடன் ஒன்றிணைந்து ஜூன் 27ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் விழிப்புணர்வு வாரத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் போதை பொருள் விழிப்புணர்வு தொடர்பான கட்டுரை ஓவியம் வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இதனை சிறப்பாக நடத்துவதற்கு தேவைப்படும் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது