ராணுவ வீரரை மணப்பதற்காக காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற கல்லூரி மாணவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை மூறியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு ரேடியாலஜி படித்து வந்தார். கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற கல்லூரி மாணவியுடன் ஷாரோனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இது நாளடைவில் காதலமாக மாறியது. கிரீஷ்மா அங்குள்ள கல்லூரியில் எம்ஏ 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர்களின் காதல் விவகாரம் மாணவி கிரீஷ்மாவின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அவசரமாக ராணுவ வீரர் ஒருவருக்கு கிரீஷ்மாணவை திருமணம் செய்து முடிவு செய்துள்ளனர். முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிரீஷ்மா, பின்னர் பெற்றோரின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம், ராணுவ வீரருடன் கிரீஷ்மாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. பின்னர், ஷாரோன் உடனான காதலையும் நாளடைவில் முறித்துக் கொண்டார்.

இந்நிலையில், இதுகுறித்து கேட்பதற்காக கடந்த 14ஆம் தேதி ஷாரோன் தனது நண்பர் ரெஜினுடன் கிரீஷ்மாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கிரீஷ்மாவிடம் தன்னை ஏமாற்றி விட்டாயே என கதறி அழுதுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணத்துக்கு ஒப்புக் கொண்டதாக கிரீஷ்மா தெரிவித்துள்ளார். அப்போது, திருமணத்திற்கு இடைஞ்சலாக ஷாரோன்ராஜ் வரலாம் என்ற சந்தேகம் கிரீஷ்மாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கொன்று விடலாம் என்ற கொடூர எண்ணம் அவருக்கு உருவானது. அப்போது, ஷாரோனுக்கு கஷாயத்தையும், ஜூசையும் கொடுத்துள்ளார். அதை குடித்த பின்னர் வெளியே வந்த சிறிது நேரத்தில் ஷாரோன்ராஜ் தனது நண்பரிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். பின்னர் வயிற்றுவலி அதிகமானதால் ஷாரோன்ராஜ் பாறசாலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கடந்த 25ஆம் தேதி சிகிச்சை பலனின்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஷாரோனின் தந்தை ஜெயராஜ் போலீசில் புகார் அளித்தார். கிரீஷ்மா, அவரது பெற்றோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில், ராணுவ வீரரை மணப்பதற்காக கஷாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து ஷாரோனை கொன்றதாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். கொலைக்கு பெற்றோரும் உடந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதால், அவர்களிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.