கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மாமூட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மெல்வின். இவர், ஐரோணிபுரம் பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ பட்டதாரியான சசிகலா என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது மெல்வின் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், மனைவி சசிகலா மற்றும் மகன் மாமூட்டுக்கடை பகுதியில் உள்ள சொந்த வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டில் வேலை பார்க்கும் மெல்வின், மனைவி சசிகலாவின் நடத்தையில் சந்தேகமடைந்து அடிக்கடி போன் செய்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சசிகலா தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்று வந்தால் கூட சந்தேகத்தில் யாருடன் சுற்றி வருகிறாய் என்று கேட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு சசிகலாவுக்கு போன் செய்த மெல்வின், தகறாறில் ஈடுபட்டதோடு இரண்டு நாட்களில் ஊருக்கு வர உள்ளதாகவும் அப்போது எல்லாம் தெரிய வரும் எனவும் கூறியுள்ளார். சந்தேக கணவனின் மிரட்டலால் அச்சமடைந்த சசிகலா நேற்று தனது வீட்டிலிருந்து புறப்பட்டு, தனது மகனுடன் தாய் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். தாய், தனது மகளுடன் காப்பிக்காடு பகுதியில் உள்ள ஜோசியர் ஒருவரிடம் சென்று தனது மகளின் எதிர்காலம் குறித்து கேட்டறிந்துள்ளார். பின்னர், தாயை வீட்டிற்கு அனுப்பி வைத்த சசிகலா, ஆட்டோவில் மண்டைக்காடு கோவிலுக்கு சென்றுள்ளார். ஆட்டோ குளச்சல் அருகே வெட்டுமடை பகுதியில் வரும் போது ஓட்டுநரிடம் ஆட்டோவை நிறுத்த சொல்லி மகனுடன் பிரியாணியை சாப்பிட்டு விட்டு குழந்தையுடன் கடலில் சென்று கைகழுவி வருவதாக கூறி சென்றுள்ளார்.
வெகு நேரமாகியும் அவர் திரும்பாததால் சந்தேகமடைந்த மாற்றுதிறனாளியான ஆட்டோ ஓட்டுநர் அந்த வழியாக வந்த மீனவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கடற்கரையில் சென்று பார்த்த போது சசிகலா கடலில் குதித்து சடலமாக மிதந்த நிலையில், குழந்தை மாயமானது. பின்னர், இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சசிகலாவின் உடல் மீட்கப்பட்ட நிலையில், குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.