தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு தேவையான ஊழியர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்யும் உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கப்பட்டு நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில், 5 புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை செய்தது. ஆர்.என்.ரவியும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 5 பேர் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி. சிவனருள், ஐஆர்எஸ் அதிகாரி ஆர்.சரவணகுமார், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஏ.தவமணி, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த உஷா சுகுமார், கோவை ஸ்ரீநாராயணகுரு மேலாண்மை கல்வி நிறுவன முதல்வர் முனைவர் ஆர்.பிரேம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்களும் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவி வகிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.