சென்னை கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரெளபதி முர்மு விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது நீட் விலக்கு மசோதாவிற்கு தாமதமின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள கடிதத்தில், “தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது. மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதால், அதைத் தொடர்ந்து மத்திய அரசின் சட்டங்களில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாகவும், பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் நடைபெற்ற சேர்க்கை முறை நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து, மாற்றுவழிகளை செயல்படுத்துவதற்குத் தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டும், பேரவையில் ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021’ நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த தீர்மானம் ஆளுநருக்கு 18-9-2021 அன்று அனுப்பப்பட்டது. ஆளுநர் 5 மாத காலத்திற்குப் பிறகு, மேற்படி சட்டமுன்வடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு அரசுக்குத் திருப்பியனுப்பிய நிலையில், 8-2-2022 அன்று சட்டமன்றத்தில் மீண்டும் இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறவேண்டி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சட்டமுன்வடிவு தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய உயர்கல்வித் துறை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் கோரிய அனைத்து விளக்கங்களும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உரிய காலத்திற்குள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இதுவரை இந்த சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கப்படாத நிலை உள்ளது. இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு, நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.