காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தென்புஷ்கரணி பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மனைவி புஷ்பா (34). இவருக்கு ஆண் நண்பர்கள் அதிகம் இருந்து வந்ததாகவும், மது அருந்தும் பழக்கம் உடையவர் என்றும் கூறப்படுகிறது. கணவர் வெங்கடேசன் கூலி வேலைக்கு சென்ற நிலையில், தனது ஆண் நண்பருடன் புஷ்பா மது அருந்தியுள்ளார். ஆனால், வேலை முடிந்து கணவன் வெங்கடேசன் வீட்டிற்கு வந்து பார்க்கையில் புஷ்பா தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார்.
பின்னர், கணவர் வெங்கடேசன் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து புஷ்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் புஷ்பாவின் உடலில் காயங்கள் அதிகம் உள்ளதால், புஷ்பா கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர். இதனால் புஷ்பாவுடன் பழகி வந்த ஆண் நண்பர்களிடமும், கணவரிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் புதிய திருப்பமாக திருவள்ளூர் மாவட்டம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த யோபு (28) என்கிற வாலிபர் திருவள்ளூர் மணவாளநகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து, யோபுவை ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், புஷ்பாவிற்கும் யோபுவிற்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்து வந்தது தெரியவந்துள்ளது. யோபுவிற்கு திருமணம் நடக்க இருப்பதால் புஷ்பாவிடம் விலகி இருந்ததாகவும், நேற்று இருவரும் ஒன்றாக மது அருந்தி கொண்டிருக்கும் போது, “நீ என்னைவிட்டு வேறு எவரையும் திருமணம் செய்யக்கூடாது” என்று புஷ்பா குடிபோதையில் வற்புறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த யோபு, புஷ்பாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து புஷ்பா சம்பவ இடத்திலேயே இறந்ததும், இறந்த புஷ்பாவை தூக்கில் மாட்டிவிட்டு யோபு தப்பிச் சென்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.