சென்னை மதுரவாயல் அருகே பாக்கிய லட்சுமி நகரை சேர்ந்தவர் நடராஜன் என்பவரது மகன் கௌதம். இவருக்கு 32 வயதாகும் நிலையில், வீட்டின் தரைத்தளத்தில், அவரது மனைவி மஞ்சு (26) மற்றும் 9 மாத பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மார்ச் 15ஆம் தேதி இரவு, தனது தந்தையின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டு விட்டு தூங்கச் சென்றுள்ளார்.
இரவு முழுவதும் சார்ஜ் ஏறிய நிலையில், மறுநாள் அதிகாலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த தீ மளமளவென பரவிய நிலையில், வீட்டிற்குள் இருந்த கெளதம், அவரது மனைவி மற்றும் கைக் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், மூவரும் வெளியேற முயற்சித்தனர்.
ஆனால், தீ வேகமாக பரவியதில் மூவரும் காயமடைந்தனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மார்ச் 17ஆம் தேதி 9 மாத கைக்குழந்தை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து, குழந்தையின் தந்தையும், தாயும் சிகிச்சைப் பெற்று வந்தனர். ஆனால், தற்போது குழந்தையின் தந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.