இந்த டிஜிட்டல் யுகத்தில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள மொபைல் பயனர்களுக்கு மோசடியான சர்வதேச அழைப்புகள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
டிஜிட்டல் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மோசடி செய்பவர்கள் பொதுமக்களை ஏமாற்ற சர்வதேச தொலைபேசி எண்களைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் அரசாங்க நிறுவனங்கள் அல்லது பிற நம்பகமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் போல் காட்டி பேசுகின்றனர்.. இதற்கு பதிலளிக்கும் விதமாக, அனைத்து தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களுக்கும், தெரியாத சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகளைப் பெறும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக நாட்டின் குறியீடு +91 இல் தொடங்காமல், வேறு எண்களில் தொடங்கும். அக்டோபர் 22 அன்று ‘சர்வதேச இன்கமிங் போலி அழைப்பு தடுப்பு அமைப்பு’ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதல் 24 மணி நேரத்திற்குள், இந்த அமைப்பு, தோராயமாக 90% சர்வதேச அழைப்புகள் மோசடி அழைப்புகள் என கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து, பயனர்களைப் பாதுகாக்க இதுபோன்ற அழைப்புகளைத் தடுக்க தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மத்திய அரசின் தகவல் தொலைத்தொடர்புத் துறை (DoT) இத்தகைய மோசடிகளின் ஆபத்தான அதிகரிப்பை சுட்டிக்காட்டி உள்ளது. அதன்படி, அரசாங்கத்தின் புதிய தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் 1.35 கோடி மோசடி அழைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இருப்பினும், மோசடி செய்பவர்கள் இந்த கண்டறிதலை தவிர்ப்பதற்கு உண்மையான சர்வதேச எண்களைப் பயன்படுத்தி தங்கள் தந்திரங்களை மாற்றினர். இதை தொடர்ந்து மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை குறிப்பிட்ட வழிகாட்டுதலை வழங்கியது.
எனவே அறிமுகமில்லாத சர்வதேச எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியது, குறிப்பாக அரசாங்கத் துறைகள் அல்லது அதிகாரிகளைப் போல் பேசும் நபர்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அழைப்பு மோசடிகளின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில், அரசாங்கம் ‘டிஜிட்டல் கைது’ எனப்படும் புதிய வகை டிஜிட்டல் மோசடி பற்றிய எச்சரிக்கைகளையும் வெளியிட்டது. இந்த மோசடியில் சைபர் குற்றவாளிகள் வீடியோ அழைப்புகளை மேற்கொள்வது, போலீஸ் அல்லது சிபிஐ அதிகாரிகள் போன்ற அரசு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்வது, பொய்யாக குற்றம் சாட்டுவது ஆகியவை அடங்கும். மேலும் உடனடியாக பணம் வழங்குமாறு அவர்கள் கோருகின்றனர், பணத்தை வழங்கவில்லை என்றால் சட்டரீதியான விளைவுகள் ஏற்படும் என மிரட்டுகின்றனர்.
முன்னதாக, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) இந்த வகையான மோசடி குறித்து எச்சரிக்கைகளை வெளியிட்டது. முறையான விசாரணை நிறுவனங்கள் ஒருபோதும் பணம் கோருவதில்லை அல்லது தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் விசாரணை மேற்கொள்ளாது என்று விளக்கம் அளித்தது. இதுபோன்ற மோசடி குறித்து, உடனடியாக புகாரளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
மோசடி செய்பவர்கள் தங்கள் ஆதாயத்திற்காக டிஜிட்டல் தளங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், பயனர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எந்தவொரு சட்டபூர்வமான அரசாங்க நிறுவனமும் இந்த முறையில் தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைக் கேட்காது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இது போன்ற அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்கு முன் அழைப்பவரின் அடையாளத்தை எப்போதும் சரிபார்க்கவும், சந்தேகம் இருந்தால் அழைப்பை துண்டிக்கவும்.