இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செயல்படுத்தி வருகிறது. அவ்வப்போது இந்த திட்டங்களில், சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது. அதிலும், கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பின்றி, பொதுமுடக்கத்தில் அவதிப்பட்டபோது, சிறப்பு சலுகை ஒன்றை எஸ்பிஐ அறிவித்திருந்தது. ஏதாவது அவசர காரணத்துக்காக உங்களுக்கு பணம் தேவைப்பட்டால், வீட்டிலிருந்தபடியே 45 நிமிடங்களுக்குள் கடனை பெற்றுக் கொள்ளலாம் என்றும், 6 மாதத்துக்கு மாத தவணை கட்ட வேண்டியதில்லை என்றும் அறிவித்திருந்தது.
அந்தவகையில், பாரத ஸ்டேட் வங்கி அதன் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், தொடர்ந்து கடன்களை வழங்கி வருகிறது. இதில், வீட்டுக்கடன்களை பொறுத்தவரை வீட்டுக்கடன்கள், என்ஆர்ஐ வீட்டுக் கடன்கள், ஃப்ளெக்ஸிபே வீட்டுக் கடன்கள், ஷௌர்யா வீட்டுக் கடன்கள், ரியல்டி வீட்டுக்கடன்கள் போன்ற பல விருப்பங்களை வழங்குகிறது. வீட்டுக்கடன்களுக்கான வட்டிகள் எல்லாமே குறைந்த வட்டி விகிதங்களாகும். அபராதமும் கிடையாது.
இந்த வீட்டுக்கடனை பெற வேண்டுமானால் அதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? அதற்குரிய ஆவணங்கள் என்னென்ன தேவைப்படும்? என்பது குறித்து பார்க்கலாம். வீட்டுக் கடனை வாங்க வேண்டுமானால், விண்ணப்பதாரர் 18 முதல் 70 வயதுக்குட்பட்ட இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். 3 பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் இருக்க வேண்டும்.
அடையாள அட்டை, (பான் கார்டு / பாஸ்போர்ட் / ஓட்டுநர் உரிமம் / வாக்காளர் அடையாள அட்டை) விற்பனை பத்திரம் உள்ளிட்ட சொத்து ஆவணங்கள், பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்ப படிவம், அடையாளம், வருமான சான்றிதழ், குடியிருப்புக்கான சான்று (இவைகளில் ஏதேனும் ஒன்று) தொலைபேசி பில் நகல், மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம், குழாய் எரிவாயு பில் அல்லது பாஸ்போர்ட் நகல், ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
எஸ்பிஐ வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் அல்லது வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்களில் விண்ணப்பிக்கலாம். இதற்கிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு எஸ்பிஐ மற்றொரு அதிரடியை வெளியிட்டிருந்தது. அந்தவகையில், எஸ்பிஐ வீட்டுக்கடனுடன் சேர்த்து சோலார் திட்டத்தையும் இணைத்து புதிய கடன் திட்டத்தை அறிவித்திருக்கிறது. அதாவது, வரும் காலங்களில் கட்டிடம் கட்டுபவர்கள், தங்கள் கூரையில் சோலார் பொருத்துவதை கட்டாயமாக்க எஸ்பிஐ வங்கி திட்டமிட்டுள்ளதாம்.
வீட்டுக் கடன் விண்ணப்பதாரர்களுக்கு இது கட்டாயமாக்கப்படலாம் என தெரிகிறது. இந்த கடன் 10 முதல் 20 வருடங்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் மட்டும் செயல்வடிவம் பெற்றால், வீடுகளின் கூரையில் சோலார் யூனிட்களை நிறுவும் திட்டங்களுக்கு மட்டுமே, எஸ்பிஐ வங்கிக் கடன்களை அனுமதிக்கும் என்று சொல்லப்படுகிறது.