காலையில் வாழைப்பழம் எடுத்துக்கொண்டால் அது கார்போஹைட்ரேட் அளவை அதிகரிப்பதுடன், மேலும் உணவை சாப்பிடத் தூண்டி, உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
உலகளவில் பெரும்பாலும் அனைவராலும் விரும்பப்படக்கூடிய, பல்வேறு சத்துகள் மற்றும் சுவை நிறைந்தது வாழைப்பழம். உடனடி எனர்ஜி தருவது மட்டுமின்றி, எடையை குறைப்பதிலும், ஜீரண சக்தியை தூண்டுவதிலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் வாழைப்பழம் முக்கியப்பங்கு வகிக்கிறது. மிகவும் மலிவாக கிடைக்கும் என்பதால் பெரும்பாலானோர் தங்கள் தினசரி உணவில் வாழைப்பழத்தை சேர்த்துக்கொள்கின்றனர். குறிப்பாக நீண்ட நேரம் பசிக்காது என்பதால் காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இதனை கருத்தில்கொள்வது அவசியம்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின்களுடன் இயற்கை சர்க்கரையும் நிறைந்திருக்கிறது. இந்த பழமானது சாப்பிட்டவுடனே எனர்ஜியை அளிப்பது மட்டுமில்லாமல் ரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கிறது. குறிப்பாக டைப் – 2 டயாபட்டிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது தீமையாகவே முடியும். அதேபோல் வாழைப்பழத்தை தொடர்ந்து தினசரி காலை உணவாக எடுத்துக்கொண்டால் அது கார்போஹைட்ரேட் அளவை அதிகரிப்பதுடன், மேலும் உணவை சாப்பிடத் தூண்டி, உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
வாழைப்பழத்தை மட்டும் காலை உணவாக சாப்பிடுவது முறையாக இருக்காது என்றாலும், அதனை பிற காலை உணவுடன் சேர்த்து சாப்பிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். இதனால் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அளவுகள் சமநிலைப்படுத்தப்படும் என்கின்றனர். பிற உணவுகளிலிருந்து கிடைக்கப்பெறும் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் மேக்ரோ ஊட்டச்சத்துகள் வாழைப்பழத்தை சமன்செய்வதால், நாள்முழுவதும் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்கிறது. அதேசமயம் ரத்த சர்க்கரை அளவு மற்றும் அமில அளவுகளும் சமச்சீராகவே இருக்கும்.
ஒரு மீடியம் அளவிலான வாழைப்பழத்தில் 3 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. அதனுடன் ஒரு கப் ஓட்ஸை சேர்த்து சாப்பிடுவது செரிமான மண்டலத்தை தூண்டுவது மட்டுமில்லாமல் நாள் முழுவதும் திருப்தியான உணர்வை கொடுக்கும். மேலும் உடலின் இயக்கத்தை மேம்படுத்தும். ஆரோக்கியமான, நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த வாழைப்பழம் போன்ற உணவுடன், இதய ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்து சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவு மற்றும் பசியை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. பீனட் பட்டர் மற்றும் வேகவைத்த முட்டைகளுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
அதேபோல், வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடவேண்டாம் என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். ஊட்டச்சத்து மிகுந்ததாக இருந்தாலும், தனியாக சாப்பிட்டால் இதிலுள்ள இயற்கை அமிலத்தன்மையானது தீவிர செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். அதனால் வாழைப்பழத்தை, ஆப்பிள், பாதாம், வால்நட் மற்றும் பிற உலர் பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம். இது அமிலத்தன்மையை குறைக்கும். இதுதவிர, வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகமாக இருப்பதும், ரத்தத்தில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சமச்சீரின்மைக்கு வழிவகுக்கும். இது கார்டியோவாஸ்குலார் சிஸ்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறக்கவேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.