ஆன்லைனில் வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து, நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட மூவரை கைது செய்துள்ள போலீசார், முக்கிய குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் அம்பிகா நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர், தனது மனைவி, குழந்தை, மாமியார், மாமனார் ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், வேறு வீட்டுக்கு போக வேண்டும் என நினைத்த மணிகண்டன், ஆன்லைன் மூலம் விளம்பரம் கொடுத்திருந்தார். இதை பார்த்து கோபி மகாராஜா என்பவர், மணிகண்டனை தொடர்பு கொண்டு, தங்களிடம் வீடு உள்ளது… கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 132-வது தெரு பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார். அதன்படி, மணிகண்டனும் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, கோபி மகாராஜா மற்றும் அவரது மனைவி, மகன் உள்ளிட்டோர் வீட்டில் இருந்துள்ளனர். அவர்கள், முத்தமிழ் நகர் 3-வது தெரு காவேரி சாலை பகுதியில் தங்களுக்கு சொந்தமான வீடு உள்ளது. அதனை ரூ.5 லட்சத்திற்கு லீசுக்கு விட முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளனர்.

இதையடுத்து, மணிகண்டனுக்கு அந்த வீடு பிடித்ததால், முன்பணமாக ரூ.2 லட்சம் பேசி முடிக்கப்பட்டு, ரூ.1 லட்சம் காசோலையாகவும், ரூ.1 லட்சம் பணமாகவும் கடந்த நவம்பர் 23ஆம் தேதி மணிகண்டன் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் கூறிய தேதியில் வீடு ஒப்படைக்கப்படவில்லை. இதனால், கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கோபி மகாராஜா வீட்டிற்கு சென்ற மணிகண்டன், இதுகுறித்து கேட்டபோது, வீட்டில் இருந்த கோபி கத்தி மற்றும் துப்பாக்கியை காண்பித்து மணிகண்டனையும் அவர் உடன் சென்ற நபரையும் மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ந்துபோன மணிகண்டன், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

அதில், கோபி மகாராஜா ஆன்லைனில் வீடு தேடுபவர்களை குறிவைத்து ஏமாற்றியதும், அவர் குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீடு அவருடைய வீடு இல்லை என்றும், அவரிடம் இருந்தது டம்மி துப்பாக்கி என்பதும் தெரிந்தது. மேலும் விசாரணையில், கோபி மகாராஜா காண்பித்த வீடு கோவிலம்பாக்கம் நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார் (42) என்பவருக்கு சொந்தமானது என்பதும் குமாரிடமிருந்து வீட்டை லீசுக்கு வாங்கி, அதனை பலரிடம் காண்பித்து ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும், கோபி மகாராஜா உடன் இருக்கும் நபர் அவரது மனைவி கிடையாது என்பதும் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து, கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் கோபி மகாராஜாவின் மனைவி எனக் கூறிய அம்பிகா (43), அவரது மகன் பிரவீன் ராஜ் (19) மற்றும் அந்த வீட்டை லீசுக்கு விட்ட குமார் (42) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான கோபி மகாராஜாவை தேடி வருகின்றனர். அடுத்தவரின் வீட்டை காண்பித்து இதுவரை 7 பேரிடம் ரூ.36 லட்சம் வரை இந்த கும்பல் ஏமாற்றியது தெரியவந்தது.