திருமண ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை கண்டித்து திருமண வீட்டினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் டெரி. இவரது மகளின் திருமண ஊர்வலம்
நடைபெற்றது. ஊர்வலமானது முகப்பேரில் இருந்து மங்கலேரி பூங்கா சாலையாக
முகப்பேர் சாலையில் உள்ள தாய் மாமா வீட்டிற்கு மணமகளை அழைத்துக் கொண்டு
வந்தனர். அப்போது, மகளின் திருமண ஊர்வலத்தில் மேளம் அடித்து வந்த நபரான இபு என்பவர் சரிவர வாசிக்காததால் அவரை டெரி அனைவரின் முன்பாக வாசிப்பதற்கு பணம் வாங்குகிறீர்கள் அல்லவா சரியாக வாசிக்க வேண்டியது தானே என திட்டி அடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இபு, திருமண ஊர்வலம் முகப்பேர் சாலை காப்பர் ஹோட்டல் அருகே வரும் போது மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதில் தீவைத்து திருமண ஊர்வலத்தின் மீது வீசியுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இதனையடுத்து, இபு மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து தரையில் தேய்த்தப்படியே டெரியை நோக்கி வெட்ட ஓடியுள்ளார். ஆனால், அங்கிருந்த இளைஞர்கள் இபுவை விரட்டவே அவர் தப்பியோடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த டெரியின் உறவினர்கள் பிரதான சாலையில் படுத்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து, கலைந்து சென்றனர். டெரி கொடுத்த புகாரில் கொரட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.