விஜய்யின் தவெக-வில் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.நிர்மல்குமார் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படும் என மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி எச்சரித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து அவர் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், ”நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை. அதை நான் எப்போதும் ஆதரிப்பது கிடையாது. நடிகர்கள் திரையில் காட்டிய பொய் முகத்தை வைத்து அரசியலுக்கு வருகிறார்கள். ஒரு நடிகர் சினிமாவில் நல்லவராக நடிக்கிறார் என்றால், அவர் முதலமைச்சர் ஆக வர வேண்டுமென ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
எம்ஜிஆர் தொடங்கி விஜய் வரை திரையில் காட்டிய பொய் முகத்தை வைத்தே அரசியலுக்கு வந்துள்ளனர். எம்ஜிஆர் அனுபவத்தை வைத்து அவர் அரசியலுக்கு வந்தார். ஆனால், மற்ற நடிகர்கள் அப்படி செய்யவில்லை. கடந்த ஓராண்டு காலத்தில் அரசியல்வாதியாக விஜய்யின் செயல்பாடு மெச்ச தகுந்ததாக இல்லை. கடந்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டபோது, விஜய் கட்சியின் சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
பெரியாரை கொச்சையாக பேசி வரும் சீமானுக்கு விஜய் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. கேட்டால் தனிமனித தாக்குதலில் நாங்கள் ஈடுபட மாட்டோம் என்கிறார்கள். இதேபோல் விஜய்யை சீமான் விமர்சித்திருந்தால், தவெக பதிலளிக்காமல் இருந்திருக்குமா..? தவெகவுக்கு ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் வருகையால் பெரிய நன்மை நடக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. ஆதவ் அர்ஜுனாவினால் நன்மை நடக்கும் என விஜய் நினைக்கிறார். ஆதவ் அர்ஜுனாவின் வருகை என்பது கட்சியில் பிளவை ஏற்படுத்தும் விஷயமாகும்.
இத்தனை நாளாக விஜய்க்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது புஸ்ஸி ஆனந்த் தான். இதனால் தான், அவருக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுச்செயலாளர் என பதவி கொடுத்துள்ளனர். இன்று பிரச்சனை இல்லாமல் இருக்கலாம். எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு வழி வகுக்கும். ஆதவ் அர்ஜுனாவின் பண பலம் புஸ்ஸி ஆனந்தை விழுங்கி ஏப்பம் விடுவதற்கும் வாய்ப்புள்ளது.
ஆர்.எஸ்.எஸ்-காரரான நிர்மல்குமார், அதிமுக வழியாக தவெகவுக்கு வந்துள்ளார். அடிப்படியிலேயே சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலை கொண்டவரை தவெகவில் சேர்த்திருப்பது தவறான நடவடிக்கையாகும். இதற்கான பலனை விஜய் அனுபவிப்பார். ஆதவ் அர்ஜுனா யார் என்றால் லாட்டரி மார்ட்டினின் மருமகன். இன்றைக்கு அவருக்கு கிடைத்துள்ள மரியாதைக்கு காரணம் அவரிடம் உள்ள பணம் தான்.
ஆதவ் அர்ஜுன் உள்ளே வந்தவுடன் லாட்டரி டிக்கெட்டும், கள்ள டிக்கெட்டும் கூட்டணி அமைத்துவிட்டார்கள் என மீம்ஸ் வைரலாகிறது. விஜய் நடிகராக இருக்கும்போது முதல் நாளில் கள்ள டிக்கெட் விற்பனையாகும். அதேசமயம், ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வியூகம் விஜய்க்கு பலன் கொடுக்கும். ஆதவ் அர்ஜுனா, திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றது அரசியல்தான். நாகரிக அரசியல் என்று சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா என்பது விஜய், திருமா, ஆதவ் இணைந்து நடத்திய ஒரு நாடகம். திமுகவை ஏற்றுவதற்காகவே இதனை செய்துள்ளார்கள். விசிக, திமுக கூட்டணியை விட்டு விலகுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இருந்ததால், அவர்கள் திமுக கூட்டணியில் இருந்தனர். இப்போது பாஜக விலகி விட்டதால் அவர்கள் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
ஆதவ் அர்ஜுனா திமுக மீது கோபத்தில் இருக்கிறார். அதனால் தான், திமுக கூட்டணியில் இருந்து விசிகவை பிரித்து, தவெகவுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார். 2026 தேர்தல் நெருங்கும்போது இதுபோன்ற காட்சிகளை பார்க்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.