சென்னை மெரினா கடற்கரையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னத்தை அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு 15 நிபந்தனைகளுடன் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழங்கியது. இந்த இறுதி ஒப்புதலுடன், மாநில அரசு தனது திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 19 அன்று பொதுப்பணித் துறைக்கு மத்திய அமைச்சகம் எழுதிய கடிதத்தில், நிபுணர் மதிப்பீட்டுக் குழு மற்றும் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் CRZ அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறியது. நிபந்தனைகளை அமல்படுத்துவது திருப்திகரமாக இல்லாவிட்டால், அமைச்சகம் அனுமதியை ரத்து செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் சுற்றுச்சூழல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்குவதற்கான நிலையை பொதுப்பணித்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த அனுமதியை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்திற்கு வழங்கப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதியை ரத்து செய்யக் கோரி, நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையைச் சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன் என்பவர் தொடர்ந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு. வழக்கு விசாரணை அக்.10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.