சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசிடமிருந்து அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கலாகும் போது அதை எதிர்க்க வேண்டும் என கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
அந்த வகையில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவசர சட்டத்துக்கு எதிராக ஆதரவு கோரினார். அப்போது அவருடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் உடனிருந்தார். இரு மாநில முதலமைச்சர்களையும் பொன்னாடை போர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது டி.ஆர்.பாலு, கனிமொழி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் உடனிருந்தனர்.