ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற இலவச வகுப்பு நடத்தப்படும் என அரியலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் நிறுவனம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சித் திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு (SSC, MTS, SSC CGL, SSC CHSL, SSC JE) 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டியை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://ssc.nic.in) வெளியிட்டுள்ளது.
இதன்படி 11,000 காலி அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சிக்கு 18 முதல் 32 வயது வரை உள்ள 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்ட படிப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்விற்கு விண்ணப்பிப்பதும் மற்றும் தேர்வு நடைபெறுவது அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும். இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித்தேர்வு, சில பிரிவுகளுக்கு உடற்தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய மூன்று முறைகளில் நடைபெற உள்ளன.
மேலும் இந்த போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணியாளர், தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிக்கேற்ப மாத ஊதியமாக 18,000 ரூபாய் முதல் 22,000 வரை வழங்கப்படும். எனவே இந்தப் பயிற்சிக்கு விருப்பமுள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் பயன் பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.