fbpx

ஆசிய தடகள போட்டி!… இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்!… பதக்கப்பட்டியலில் 3-வது இடம்!

ஆசிய தடகள போட்டியில் குண்டு எறிதல் மற்றும் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள்சேஸ் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.

24-ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான குண்டு எறிதலில் ஆசிய சாதனையாளரான இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தனது 2-வது முயற்சியில் 20.23 மீட்டர் தூரம் எறிந்தார். அத்துடன் அவர் இடுப்பின் கீழ் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக காலை நொண்டியபடி போட்டியில் இருந்து விலகினார். அதற்கு மேல் அவரால் தொடர முடியாவிட்டாலும் அவர் எறிந்த 20.23 மீட்டர் தூரமே எதிர்பார்த்தபடி அவர் தங்கப்பதக்கத்தை வெல்ல போதுமானதாக அமைந்தது. ஈரானின் சபெரி மெக்தி (19.98 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், கஜகஸ்தானின் இவான் இவானோவ் (19.87 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

பஞ்சாப்பை சேர்ந்த 28 வயதான தஜிந்தர்பால் சிங் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக 2-வது முறையாக பதக்கம் வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த 3-வது குண்டு எறிதல் வீரர் என்ற பெருமையை தனதாக்கினார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். இந்த வகையில் ஏற்கனவே கத்தாரின் பிலால் சாத் முபாரக் (1995 மற்றும் 1998, 2002 மற்றும் 2003), குவைத்தின் முகமது காரிப் அல் ஜிங்வி (1979, 1981,1983) ஆகியோர் தொடர்ச்சியாக தங்கம் வென்று சாதனை படைத்திருக்கின்றனர்.

பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள்சேஸ் ஓட்டப்பந்தயத்தில் 28 வயதான இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 9 நிமிடம் 38.76 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். சீனாவின் ஷூயாங் சூ (9 நிமிடம் 44.54 வினாடி) வெள்ளிப்பதக்கத்தையும், ஜப்பானின் யோஷிமுரா ரெய்மி (9 நிமிடம் 48.48 வினாடி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். பெரிய சர்வதேச போட்டியில் பாருல் சவுத்ரி தங்கப்பதக்கத்தை முத்தமிடுவது இதுவே முதல்முறையாகும். பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவை சேர்ந்த 19 வயது இளம் வீராங்கானை ஷைலி சிங் 6.54 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஜப்பானின் சுமிரே ஹடா (6.97 மீட்டர்) தங்கப்பதக்கத்தையும், சீனாவின் ஜோங் ஜியாவி (6.46 மீட்டர்) வெண்கலப்பதக்கத்தையும் சொந்தமாக்கினர். 2021-ம் ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷைலி சிங் பெரிய போட்டியில் சீனியர் பிரிவில் கைப்பற்றிய முதல் பதக்கம் இதுவாகும். நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் இதுவரை இந்தியா 5 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் வென்று பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. ஜப்பான் 11 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்திலும், சீனா 5 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடத்திலும் உள்ளன.

Kokila

Next Post

ஆசிய விளையாட்டு போட்டி 2023!... இந்திய அணி அறிவிப்பு!... கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்!... முன்னணி வீரர்களுக்கு இடமில்லை!

Sat Jul 15 , 2023
ஆசிய விளையாட்டுபோட்டிக்கான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் இடம் பெறுகிறது. இதில் கிரிக்கெட்டும் ஒன்று. இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிக்கு கிரிக்கெட் அணிகளை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. அதன்படி, […]

You May Like