ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக். 1) ஒரே நாளில் மட்டும் பல்வேறு விளையாட்டுப் பிரிவில் சுமார் 15 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது. அதாவது 3 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் வென்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் தடகளம், துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், கோல்ஃப், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில், இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக அதிகளவில் துப்பாக்கிச்சுடுதலில் தங்கப்பதக்கங்களை இந்திய வீரர் வீராங்கனைகள் தட்டிசெல்கின்றனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும், 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே, குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங் உள்ளிட்டோர் தங்கம் வென்றனர். இதேபோல், துப்பாக்கி சுடுதலில் ஆடவர் ட்ராப் குழுப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர்களான அஜய்குமார் சரோஜ் வெள்ளி பதக்கமும் ஜின்சன் ஜான்சன், வெண்கல பதக்கத்தையும் வென்றனர். மகளிர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹ்ரமிலன் பெயின்ஸ் வெள்ளி பதக்கம் வென்றார். பேட்மிண்டன் ஆடவர் குழு பிரிவில் இந்தியா வெள்ளி வென்றது.மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ஜோதி யர்ராஜி வெள்ளி வென்றார்.
மகளிர் வட்டு எறிதலில் 58.62 மீட்டர் தூரம் வட்டை எறிந்து வெண்கலம் வென்றார் சீமா புனியா. மகளிர் ஹெப்டத்லானில் நந்தினி அகசரா வெண்கலம் வென்றார். ஆடவர் நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர், வெள்ளி வென்றார். மகளிர் குத்துச்சண்டை 50 கிலோ எடைப்பிரிவில் நிகத் ஜரீன் வெண்கலம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் மகளிர் ட்ராப் குழுப் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது, கோல்ஃப் ஆட்டத்தில் அதிதி அசோக் வெள்ளி வென்றார். துப்பாக்கி சுடுதல் ஆடவர் தனிநபர் ட்ராப் போட்டியில் கினான் டேரியஸ் வெண்கலம் வென்றுள்ளார்.
அதனடிப்படையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் பல்வேறு விளையாட்டுப் பிரிவில் சுமார் 15 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது. அந்தவகையில் பதக்கப்பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தில் நீடிக்கும் இந்தியா, மொத்தமாக 13 தங்கம், 21 வெள்ளி மற்றும் 19 வெண்கல பதக்கத்துடன் 53 பதக்கங்களை வென்றுள்ளது. சீனா, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.