அஸ்ஸாம் மாநில காவல்துறை தொடர்ந்து மூன்றாவது நாளாக மாநிலத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று வரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,278-ஐ கடந்துள்ளது. மாநிலம் முழுவதும் குழந்தை திருமணம் தொடர்பாக போடப்பட்ட 4,074 எஃப்ஐஆர்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. பிஸ்வநாத் மாவட்டத்தில் குறைந்தது 139 பேரும், பார்பேட்டாவில் 130 பேரும், துப்ரியில் 126 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக துப்ரியில் அதிகபட்சமாக 374 வழக்குகளும், ஹோஜாயில் 255 வழக்குகளும், மோரிகானில் 224 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வரை குழந்தைத் திருமணத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
14 வயதுக்குட்பட்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளும், 14 முதல் 16 வயதுக்குட்பட்ட பெண்களை திருமணம் செய்பவர்கள் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்படுவார்கள் என்றும் முதல்வர் கூறினார்.
14 வயதுக்குட்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்களை பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவு செய்ய மாநில அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.