இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஐபிஎல் அமைப்பு, 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. 10 இந்திய நகரங்களைச் சேர்ந்த அணிகள் பிரான்சிஸ் முறையில் இதில் கலந்து கொள்கின்றன. அணியில் ஒவ்வொரு வீரர்களும் பெரும் தொகை கொடுத்து தேர்வு செய்யப்படுகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட்டின் மொத்த மதிப்பு 2020ஆம் ஆண்டில் ரூ.51,062 கோடியாக கணக்கிடப்பட்டது. 2022இல் இதன் மதிப்பு ரூ.90,038 கோடியாக உயர்ந்தது.
தற்போது (2023) இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட்டின் மொத்த மதிப்பு 1.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஹூலைஹன் லோக்கே முதலீட்டு வங்கி கணித்துள்ளது. ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 26,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் ஐந்தாம் முறையாக ஐபிஎல் போட்டியை வென்றுள்ள சிஎஸ்கே அணியின் மொத்த மதிப்பு 1,760 கோடியாக அதிகரித்துள்ளது. 2-வது இடத்தில் உள்ள பெங்களூரு அணியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,606 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
3ஆம் இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.1,564 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 4-வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியின் மொத்த மதிப்பு ரூ.1,490 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2023 – 2027 வரை ரூ.52,710 கோடிக்கு ஊடக உரிமைகள் வயாகாம்ஸ் ஸ்டார் போர்ட்ஸ் குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொத்து மதிப்பு தான் மற்ற எல்லா அணியைவிட அதிகமாக உள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக் தொடங்கியபோது வாங்கப்பட்ட 8 அணிகளில் சென்னை அணியும் ஒன்று. இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சீனிவாசன் தான் இதன் உரிமையாளர் ஆவார். மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.