இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான கார்கள் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் திறன் கொண்டவை. இந்த எரிபொருள் பூமியி்ல் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய்யில் இருந்து தயாரிப்படுகிறது. ஆனால், பூமியிலிருந்து இன்னும் எவ்வளவு காலத்திற்குக் கச்சா எண்ணெய் கிடைக்கும் என்று நமக்குத் தெரியாது. இதனால் மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். கார் தயாரிப்பு நிறுவனங்களும் அதை முன்னெடுத்து வருகின்றன. இதையடுத்து தற்போது ஹைபிரிட் கார்கள், எலெக்ட்ரிக் கார்கள், ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் கார்கள் தயாரிப்பில் உள்ளன.
எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு மின்சார சக்தி தேவை. இந்த மின் சக்தி ஏதாவது எரிபொருள் மூலம்தான் கிடைக்கிறது. இதனை மாற்றி சூரிய சக்தியில் இந்த மின்சாரத்தை எடுத்து எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தும்படியான சூரிய சக்தி கார்கள் குறித்து சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை அடிப்படியாகக் கொண்டு சில நிறுவனங்கள் சூரிய சக்தியில் இயங்கும் காரை தயாரிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளன. சூரிய சக்தி என்பது நமக்கு எப்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். இது என்றைக்குமே தீர்ந்து போகாத ஒரு ஆற்றல் என்பதால் இந்த சக்தியைப் பயன்படுத்தி கார்களை வடிவமைத்தால் அது இயற்கை வளங்களை அழிக்காமல் இயங்கும்.
தற்போது உள்ள கார்களுக்கு நல்ல மாற்றாக அமையும். ஆனால், அது அவ்வளவு எளிதல்லை. ஒரு சதுர மீட்டர் அளவிலான சூரிய ஒளியில் 1000 வாட்ஸ் மின்சாரம் பூமிக்கு வரும். ஆனால், அதில் 20 சதவீதம் அதாவது 200 வாட்ஸ் மின்சாரத்தைத் தான் தற்போது உள்ள சோலார் பேனல்களால் கன்வெர்ட் செய்ய முடியும். ஒரு கார் முழுவதும் சோலார் பேனல்களாக வைத்து டிசன் செய்தாலும் அதிகபட்சம் 2 கிலோ வாட் மின்சாரத்தைத் தான் ஒரே நேரத்தில் எடுக்க முடியும். ஆனால், மின்சார கார் இயங்க 100 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் தேவை. அப்படி என்றால் கார் மூலம் நமக்கு கிடைக்கும் சூரிய சக்தியை விட 50 மடங்கு அதிக திறன் கொண்ட மோட்டார் அது. அதனால் சூரிய சக்தியை மட்டும் ஒரே சக்தியைக் கொண்டு கார்களை வடிவமைக்க முடியாது. கார் முழுவதும் சோலார் பேனல்கள் கொண்டு தயாரிப்பது காரின் வடிவமைப்பில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். இது போக ஹைட்லைட், வைப்பர், ரியர் வியூ கண்ணாடி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முடியாது.
இது போக சோலார் பேனல்கள் ஒரே இடத்தில் இருக்கும் போது தான் சிறப்பாகச் செயல்படும் நகர்ந்து கொண்டேயிருந்தால் காற்று காரணமாக அதன் திறன் குறைய வாய்ப்புள்ளது. அதனால் தற்போது உள்ள தொழிற்நுட்பத்தின்படி சோலார் கார் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.