Sri Lankan Navy attack: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன் தினம் 300 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது ரோந்து கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். திடீரென மீன்பிடி படகுகளை நோக்கி இலங்கை கடற்படையினர் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் உயிருக்கு பயந்து அவசர அவசரமாக படகுகளை வேறு பகுதிக்கு ஓட்டி சென்றனர்.
இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் விரட்டியடிப்பு நடவடிக்கையால் மூன்று படகுகளில் மீன் வலைகளை மீனவர்கள் வெட்டி எறிந்துவிட்டு தப்பினர். இரவு முழுவதும் கடலில் பதற்றத்துடன் மீன்பிடித்து இன்று காலை கரை திரும்பிய மீனவர்களின் வலையில் குறைவான மீன்பாடுகளே இருந்தன. இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் மீன்பிடி தொழில் செய்ய முடியவில்லை. நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்கினர். இதனால் சரியாக மீன்பிடிக்க முடியாமல் இன்று கரை திரும்பினோம். ஒரு படகிற்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.
Readmore: உங்கள் வீடு தேடி வரும் குலதெய்வம்..!! இதை பண்ணிப் பாருங்க..!! நீங்களே ஆச்சரியப்படுவீங்க..!!