Indonesia Violence: இந்தோனேஷியாவில் அதிபராக பிரபாவோ இருக்கிறார். கடந்த அக்டோபரில் பதவியேற்ற இவர், முன்னாள் ராணுவ தளபதி. தற்போது, துணை சபாநாயகர், சட்ட அமைச்சர், ராணுவ அமைச்சர் என முக்கிய பதவிகளில் பெரும்பாலானோர் இவரது ஆதரவாளர்களாக உள்ள நிலையில், ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் ராணுவச் சட்டம் சமீபத்தில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, ராணுவ அதிகாரிகளாக இருப்பவர்கள், குறைந்தபட்சம் ஐந்து அரசு துறைகளில் கூடுதல் பதவியை வகிக்கலாம். இதன் வாயிலாக, சிவில் அமைப்புகளிலும் ராணுவ ஆதிக்கம் விரிவடைவதால், மாணவர்கள், இந்தோனேஷியா உரிமை மீட்புக் குழுக்கள் என பலரும் போராட்டத்தில் குதித்தனர். இந்தோனேஷியா முழுதும் வன்முறை வெடித்தது.
தலைநகர் ஜகார்த்தாவில், நாடாளுமன்ற கட்டடத்துக்குள் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நேற்று நுழைய முயன்றனர். அருகில் உள்ள தெருக்களில் குவிந்த இவர்கள், பாட்டில் குண்டுகளை வீசினர். இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் அவர்களை போலீசார் கலைத்தனர். எனினும், ஜகார்த்தா துவங்கி, ஏச் வரையிலும் கலவரம் வெடித்தது.
தெற்கு கலிமந்தன், சுரபாயா, கிழக்கு ஜாவா உள்ளிட்ட இடங்களில் அரசு அலுவலகங்கள் முன் மாணவர்கள் குவிந்து, கற்கள் மற்றும் பாட்டில் குண்டுகளை வீசியும் வாகனங்களை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வன்முறை தொடர்வதால், ராணுவமும் களமிறங்கி உள்ளது. முகாம்களிலேயே ராணுவம் இருக்க வேண்டும்; மக்களின் சிவில் வாழ்க்கையில் ராணுவம் தலையிடக் கூடாது என மாணவ அமைப்பினர் வலியுறுத்துகின்றனர்.
மேலும், கடந்த 1998 வரை, 32 ஆண்டு காலம் அசைக்க முடியாத அதிபராக சுகார்தோ இருந்தது போலவே, பிரபாவோவும் பதவியில் நீடிக்கும் திட்டத்துடன் மிக வேகமாக ராணுவச் சட்டத்தை பார்லிமென்டில் நிறைவேற்றியதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Readmore: தீராத பல் வலியும் உடனே தீரும்..!! இயற்கையான முறையில் இதை டிரை பண்ணி பாருங்க..!!