காஸாவில் நடந்த வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து மருத்துவர் பேசிய உருக்கமான வீடியோ வைரலாகி வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 13வது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது.
இந்நிலையில், காஸா ஐரோப்பிய மருத்துவமனை இயக்குநர் யூசுப் அல் அகாத் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மருத்துவர் முன்னே 6 குழந்தைகளின் சடலங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. மருத்துவர் யூசுப் அல் அகாத் பேசுகையில், ‘இந்த குழந்தைகளை பாருங்கள்.. இவர்களை கொன்றது யார்?. சுதந்திர உலகமே, ஒடுக்கப்பட்டு துயறுற்று இருக்கும் இந்த மக்களின் மீது படுகொலை நடத்தப்பட்ட போது எங்கே சென்றாய். இந்த குழந்தைகளை உலகம் பார்க்கட்டும்’ என்று உருக்கமாக பேசி உள்ளார்.