நாடு முழுவதும் அவ்வப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில், அகில இந்திய வங்கி ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்பின் தமிழகப் பிரிவு சார்பில், சென்னையில் நாளை (ஜூன் 20) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 2002 நவம்பர் மாதத்துக்கு முன்பு ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்களுக்கு 100% அகவிலைப்படி வழங்க வேண்டும், அதேபோல் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் முழுஅளவு மருத்துவக் காப்பீட்டுத் தொகையை, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
அதேபோல், 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களைப் போல கருணைத் தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். இந்த தொகையை கடந்த 2016 ஜனவரி 1ஆம் தேதி முதல், முன்தேதியிட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் வங்கி சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என கூறப்படுகிறது.