இலங்கையில் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓய்வூதியம் பெறுவோர், நாட்டுக்கு சுமையாக இல்லாமல் தனது ஓய்வு காலத்தை கழிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே இந்த நிதியின் நோக்கமாகும். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், எதிர்காலத்தில் அரசு சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இந்த பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்.
அரசு ஊழியரின் சம்பளத்தில் 8% மற்றும் முதலாளியின் பங்களிப்பாக 12% தொகையானது அரசுப் பணியில் சேர்ந்த பின்னர் உத்தேச நிதியில் மாதந்தோறும் வரவு வைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், முன்மொழியப்பட்ட ஓய்வூதிய நிதியை நிர்வகிக்க முகாமைத்துவ சபையால் நிர்வகிக்கப்படும் ஒரு சுயாதீன அமைப்பு அமைக்கப்படும் எனவும் நிதியை நிர்வகிக்க விசேட தகுதியுள்ள மேலாளர் நியமிக்கப்படுவார் எனவும் குணவர்தன கூறியுள்ளார்.