ஒவ்வொரு மாதமும் பல முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன.. அந்த வகையில் உங்கள் தனிப்பட்ட நிதியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல புதிய மாற்றங்கள் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளன… இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..
BoB கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம் : பாங்க் ஆஃப் பரோடாவின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, அனைத்து வாடகை செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கும் மொத்தத் தொகையில் 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த விதி பிப்ரவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும். வாடிக்கையாளர் தனது BoB கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.10,500 ரெண்ட் செலுத்தும் பரிவர்த்தனையைச் செய்தால், பரிவர்த்தனைக்கு ரூ.105 இல் 1% கட்டணம் விதிக்கப்படும்.
எல்பிஜி விலையில் மாற்றம் : எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் முதல் நாள் மாற்றி அமைக்கப்படுகிறது. நிறுவனங்கள் அதற்கேற்ப எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்கின்றன அல்லது குறைக்கின்றன. இதன்படி இந்த மாதமும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்கும்..
டாடா கார்களின் விலை அதிகரிக்கும் : பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் உள்ளீடு செலவுகள் ஆகியவை விலை உயர்வு ஆகியவை காரணமாக வாகனங்களில் விலை உயர்த்தப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. பிப்ரவரி 1, 2023 முதல், டாடா கார்களின் வேரியென்ட் மற்றும் மாடலைப் பொறுத்து சராசரி 1.2 சதவீதம் விலை உயர்வு இருக்கும்.
நொய்டாவில் பழைய வாகனங்கள் அகற்றப்படும் : நொய்டா பகுதியில் பிப்ரவரி 1, 2023 முதல் பெட்ரோல் இன்ஜின்களுக்கு 15 ஆண்டுகளுக்கும், டீசல் இன்ஜின்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் முந்தைய பதிவின் அடிப்படையில் இருக்கும் பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். பிப்ரவரி 1 முதல் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அகற்றப்படும்.
இது தவிர, மத்திய, மாநில அரசுகள், போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான, 15 ஆண்டுகளுக்கும் மேலான, 9 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள், ஏப்ரல் 1ம் தேதி முதல் அகற்றப்படும் என்றும், அதற்கு பதிலாக புதிய வாகனங்கள் வரும் என்றும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். .