தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் சிறப்பாக இயங்கி வருகிறது. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாசியப் பொருட்கள் மலிவான விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் 2 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சிதிலம் அடைந்த பழைய ரேஷன் கடைகளை உடனே மூட வேண்டும். புதிய கடைகளை கட்ட வேண்டும். தற்காலிகமாக கிராம மண்டபங்களில் ரேஷன் கடைகள் இயங்கலாம். அதன்படி, பழைய ரேஷன் கடைகளை உடனே புனரமைக்க வேண்டும் என அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு பறந்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி விற்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று லாபம் பார்த்து வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980-ன் படி தடுப்பு காவலிலும் வைக்கப்படுகின்றனர். கடந்த 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.49,40,516 மதிப்புள்ள 3610 குவிண்டால் அரிசி, 181 எரிவாயு உருளைகள், 1161 கிலோ கோதுமை, 1710 கிலோ துவரம்பருப்பு, 2140 லிட்டர் மண்ணெண்ணெய், 36 பாக்கெட் பாமாயில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குற்றச்செயலில் ஈடுபட்ட வாகனங்களும் நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இன்றியமையா பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.