சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என கேரளா சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதத்தில் தான் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாலை அணிந்து வருவார்கள். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய பக்கதர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதால் ஐயப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. அதனால் தெற்கு ரயில்வே டிசம்பர் 7ஆம் தேதி முதல் ஜனவரி 11ஆம் தேதி வரை திங்கட்கிழமை அன்று வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி அளித்துள்ளது. அதிகளவில் பக்தர்கள் மாலை அணிந்து வருவதால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத வகையில் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சபரிமலையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் 5 போலீசாருக்கு சின்னம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என கேரளா சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.