2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம், தனியாக பிரிந்த பின்னர், ஹைதராபாத் தெலங்கானாவின் நிரந்தர தலைநகரமானது. அதன்பின்னர் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். ஆனால் தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இதற்கு கடும் விமர்சனம் தெரிவித்ததோடு, அவர் ஆட்சிக்கு வந்த பிறகு 3தலைநகரை அமைக்கவும் முயற்சிகள் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகபட்டினத்தை அறிவித்தது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி “இனி வரும் நாட்களில் ஆந்திராவின் தலைநகராக மாறும் விசாகப்பட்டினத்துக்கு உங்களை அழைக்கிறேன். மார்ச் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாட்டை அங்கு நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆந்திராவில் தொழில் தொடங்குவது எவ்வளவு எளிமையானது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நானும் கூட விரைவில் விசாகப்பட்டினத்துக்கு குடிபெயர உள்ளேன்” என்று தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அறிவித்ததன் மூலம் மூன்று தலைநகரம் அமைக்கு திட்டம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. மேலும் இந்த புதிய தலைநகர் அறிவிப்பு வந்ததை தொடர்ந்து, அமராவதியில் அமையும் புதிய தலைநகருக்காக தங்களது நிலத்தை அரசுக்கு வழங்கிய விவசாயிகள், தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல காட்சிகள் மற்றும் விவசாய, மாணவர் அமைப்பினர் என பல தரப்பட்டவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பள்ளியில் பயிலும் மாணவர்கள் இதுவரை ஆந்திர பிரதேஷ் தலைநகர் அமராவதி என்று படித்து வந்தனர், தற்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் புதிய அறிவிப்பால், இனி விசாகப்பட்டினம் என்று மாற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது.