தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், ஆடி கிருத்திகையை முன்னிட்டு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வேலை, கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, சொந்த ஊரிலிருந்து பொதுமக்கள் நகரங்களுக்கு படையெடுத்துச் செல்வது வழக்கம். அந்தவகையில், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், சேலம் போன்ற தொழில் நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறையில் அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
இதுபோன்ற சமயங்களில் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் நெரிசல் காணப்படும். இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. வழக்கமாக, திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை மிக விமரிசையாக கொண்டாடப்படும். இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திருத்தணி கோவிலுக்கு திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் வசதிக்காக ஆண்டுதோறும் திருத்தணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்த ஆண்டும், சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வரும் 10ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மண்டலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த 3 நாட்களிலுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணிக்கு கூடுதலாக 100 பேருந்துகளும், அரக்கோணம் – திருத்தணி 25, சென்னை – திருத்தணி 100, திருப்பதி – திருத்தணி 75 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தால், அதற்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதைத்தவிர, அரக்கோணம்-திருத்தணி இடையே 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நேற்று அதாவது 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு இயக்கப்படும் சிறப்பு மின்சார ரயில் வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை ரயில்வே கோட்டம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகளும், காஞ்சிபுரம், சென்னை, அரக்கோணம், திருப்பதியில் இருந்து 300 சிறப்பு பேருந்துகளும் திருத்தணிக்கு இயக்கப்பட உள்ளது பயணிகள் மற்றும் பக்தர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.