ஆஸ்திரேலியாவின் பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ் வியாழனன்று தனது ஜோடியான ஹெய்டனுடன் நிச்சயதார்த்தத்தை அறிவித்திருக்கிறார். அல்பானீஸ் சமூக ஊடகங்களில் காதலி ஹெய்டன் புதிய வைர மோதிரத்தைக் காட்டும் மகிழ்ச்சியான செல்ஃபியைப் பகிர்ந்துள்ளார்.
நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு அந்தோனி அல்பானீஸ் மற்றும் அவரது காதலி ஹெய்டன் ஆகியோர் கான்பெரா நகரில் உள்ள இத்தாலியன் & சன்ஸ் என்ற உணவகத்தில் தங்களது காதலர் தினத்தை இரவு விருந்துடன் கொண்டாடினார். இதன் பிறகு தங்களது நிச்சயதார்த்தம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். இந்த ஜோடிக்கு ஆஸ்திரேலியா நாடு முழுவதும் வாழ்த்துக்களை பகிர்ந்து இருக்கிறது. அந்தோனி அல்பானீஸ் பதவியில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்ட முதல் பிரதமர் என்ற வரலாற்றை படைக்க இருக்கிறார்.
இந்த நிச்சயதார்த்தம் தொடர்பாக அல்பானீஸ் மற்றும் ஹெய்டன் ஆகியோர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இது தொடர்பாக தெரிவித்த அவர்கள் “இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் உற்சாகமாக இருக்கிறோம், மேலும் எங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒன்றாகக் கழிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். எங்களுக்கான காதலை அடையாளம் கண்டு கொண்டதில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்” என தெரிவித்துள்ளனர்.
பிரபல செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி அல்பனீஸும் ஹெய்டனும் 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் சந்தித்துக் கொண்டனர். அதன் பிறகு இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். மேலும் ஹெய்டன் நியூ சவுத் வேல்ஸ் பொது சங்கத்தில் பெண் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.