அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வின் தம்பி ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள காமராஜர் காலனி பகுதியில் வசித்து வந்தவர் சின்னராசு. இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை ஓட்டி வருமானம் பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு சின்ராசுவின் மனைவி கலைச்செல்வி இறந்தார்.
இதையடுத்து சின்னராசு காந்திநகரைச் சேர்ந்த புல்லட் ராஜா என்ற நளராஜாவின் மனைவி கிருஷ்ணவேணியுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் காந்தி நகரைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சதீஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் நளராஜா கைது செய்யப்பட்டார்.
அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சூழலில் சின்னராசுவுக்கும் கிருஷ்ணவேணிக்கும் நெருக்கம் அதிகமானது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கணவரும் சிறையில் இருக்க கண்டிக்க யாருமில்லை என்ற தைரியத்தில் இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து புல்லட் ராஜா வெளியில் வர… மனைவி செய்த கசமுசா வேலைகள் எல்லாம் புல்லட் காதுக்கு வந்து சேர்ந்தது. ஆத்திரமடைந்த புல்லட்ராஜா மனைவியை கண்டித்தார். ஆட்டோ ஓட்டுனரையும் கண்டித்துள்ளார். இருவரும் இதை காது கொடுத்து கூட கேட்கவில்லை. நேற்றிரவு 8 மணி அளவில் சின்னராசு , தன் ஆட்டோவில் கிருஷ்ணவேணியை அழைத்துக் கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய புறப்பட்டனர்.அவர்களை பின் தொடர்ந்த புல்லட் ராஜா கோயிலுக்கு சென்றார்.
முடி காணிக்கை கொடுக்கும் பகுதியில் இருவரும் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். இதைக் கண்ட புல்லட் ராஜாவுக்கு வெறி தலைக்கேறியது. தான் கொண்டு வந்த கத்தியை எடுத்து சின்னராசுவை சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்து சென்றார் புல்லட் ராஜா.
இந்த சம்பவத்தில் சின்னராசு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த காவல் நிலைய ஆய்வாளர் உடலைக் கைப் பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். புல்லட் ராஜாவை தேடிவந்த நிலையில் அவரை சமயபுரம் பகுதியில் தனியார் விடுதி அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர்.
காவல்நிலையத்திற்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தியதில் நான் சிறையில் இருந்தபோதே என் மனைவி வேறு ஒருத்தனுடன் கள்ளத்தொடர்பில் இருப்பது தெரிந்து அதிர்ந்து போனேன். வெளியில் வந்ததும் அவர்களை கண்டித்தேன். ஆனால் இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதனால் நான் அவர்களை கொன்றேன். என தெரிவித்தார்.
இதையடுத்து அவரை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான புல்லட் ராஜா மண்ணச்சநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகனின் தம்பி ஆவார்.