Sabarimala: ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதை தொடர்ந்து தினசரி ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை 80 ஆயிரமாக உயர்த்தலாம் என்று தேவசம் போர்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வருடம் வரை ஆன்லைன் முன்பதிவுக்கும், உடனடி முன்பதிவுக்கும் கட்டுப்பாடு எதுவும் விதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த வருட மண்டலகாலத்தின் போது சபரிமலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்கு பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வரிசையில் நின்ற பக்தர்கள் குடிநீர், உணவு கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்ட கடந்த 15ம் தேதி மாலையிலும், மறுநாள் 16ம் தேதியும் பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். ஆனால் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்த போதிலும் பக்தர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் காலை முதல் பக்தர்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. சன்னிதானத்தில் உள்ள பெரிய வரிசை வளாகம், மரக்கூட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நடைதிறந்த 5 நாளில் நேற்று முன்தினம் இரவு வரை 3.30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை கட்டுப்படுத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி தினசரி ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 80 ஆயிரமாகவும், உடனடி முன்பதிவு எண்ணிக்கை 10 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த மண்டல காலத்தில் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை கேரள அரசு 70 ஆயிரமாக குறைத்தது.
ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சிறப்பு ஆணையாளர் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தினசரி ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை 80 ஆயிரமாக உயர்த்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விரைவில் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை உயர்த்தப்படும்.
Readmore: EPFO: உங்கள் ஓய்வூதியத்தை அதிகரிப்பது எப்படி?. ஸ்மார்ட் டிப்ஸ் இதோ!