தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அரசு பெண்கள் கலைக் கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில், இங்கு 2,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் படித்து வரும் மாணவி, வழக்கம் போல் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, யாரிடமும் சொல்லாமல் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தையை ஒரு துணியில் சுற்றி கல்லூரியில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு ஒன்றுமே தெரியாதது போல வகுப்பறைக்கு சென்று மீண்டும் பாடத்தை கவனித்துள்ளார். பின்னர், அவரது ஆடைகளில் ரத்தக்கரை இருந்ததை பார்த்த சக மாணவிகள், அவரிடம் இது குறித்து கேட்டுள்ளனர். அப்போது, தனக்கு மாதவிடாய் ஏற்பட்டு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
பின்னர், சிறிது நேரத்திலேயே ரத்தப்போக்கு அதிகமானதால் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவி 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த போது சில மணி நேரத்திற்கு முன்பு தான் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாணவியிடம் விசாரிக்கையில், தனக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், அதனை குப்பைத் தொட்டியில் போட்டதை தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பேராசிரியர்கள், கல்லூரிக்கு உடனே தகவல் கொடுத்தனர். பின்னர், குப்பைத் தொட்டியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கும் குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இருவருமே நலமாக உள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆடுதுறை மகளிர் காவல் நிலைய போலீசார், மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது ஆண் நண்பருடன் பழகியதால் திடீரென கர்ப்பம் ஆனதாகவும், கர்ப்பத்தை கலைக்க முடியாத நிலையிலே தான் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்ததால் குழந்தையை பெற்றெடுத்து அதனை மறைத்து விடலாம் என முடிவு செய்ததாக கூறினார். மேலும், எப்படி பிரசவம் நடக்கிறது என்பதை யூடியூபில் மாணவி தொடர்ந்து பார்த்து வந்துளார். தனக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது யூடியூபில் பார்த்து குழந்தையை பெற்றெடுத்து அதனை குப்பைத் தொட்டியில் வீசியதாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதற்கிடையே, மாணவியை கர்ப்பமாக்கியவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! ஒரே நாளில் ரூ.680 சரிந்தது..!! நகைப்பிரியர்கள் குஷி..!!