கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் மரணித்தார். மாணவியின் மரணம் குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்ந வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் பள்ளியின் கரஸ்பாண்டன்ட் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி கரஸ்பாண்டன்ட் ரவிக்குமார் உள்பட ஐந்து பேரையும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், ஒரு நாள் காவலில் எடுத்து அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். சுமார் ஒன்பது மணி நேர விசாரணைக்கு பிறகு நீதிபதி புஷ்பராணியின் உத்தரவின்படி அவர்கள் ஐந்து பேரும் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதையடுத்து பள்ளி கரஸ்பாண்டன்ட் ரவிக்குமார், மேனேஜர் சாந்தி, ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வக்கீல் ராமச்சந்திரன் மூலமாகவும், பள்ளி முதல்வர் சிவசங்கரன் அவருக்கு ஜாமீன் கேட்டு வக்கீல் சீனிவாசன் மூலமாகவும், தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் இன்று காலையில் நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் சங்கீதா ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி சின்னசேலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். நகலை வைத்து மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி வசம் இருக்கிறது. எனவே ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை ஏற்க முடியாது. எனவே சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் பதிவு செய்த தகவல் அறிக்கையினை தாக்கல் செய்ய பள்ளி தரப்பு வக்கீலுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் நீதிபதி சாந்தி இந்த மனு மீதான விசாரணையை வருகிற 1-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.