விமானங்களின் பயணம் செய்து சக பயணிகளின் கைப்பைகளில் இருந்து நகைகள், பிற மதிப்புமிக்க பொருட்களைத் திருடிய 40 வயது நபரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்தில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்த பெண்ணின் ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்க செயின் விமான நிலையத்தில் திருட்டு போனது. அப்பெண்ணின் கை பேக்கில் இருந்து அது காணாமல் போனது. இது தொடர்பாக போலீஸில் அப்பெண் புகார் கொடுத்திருந்தார். இதேபோன்று அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவரின் பேக்கில் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் திருட்டு போனது. அடுத்தடுத்து டெல்லி விமான நிலையத்தில் திருட்டு போனது அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்தது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் விமான நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். டெல்லி மட்டுமல்லாது ஐதராபாத் மற்றும் அமிர்தசரஸ் விமான நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். திருட்டு சம்பவங்கள் பதிவாகிய அனைத்து விமானங்களிலும் ராஜேஷ் கபூர் பயணித்தது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து டெல்லியை சேர்ந்த ராஜேஷ் கபூர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது கடந்த ஒரு ஆண்டாக விமானங்கள் மற்றும் விமான நிலையத்தில் ராஜேஷ் திருடி வந்தது தெரிய வந்தது. திருட்டில் கிடைத்த பணத்தை கொண்டு சூதாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது 11 வழக்குகள் உள்ளன. விமான பயணத்தில் மூத்த குடிமக்களை குறிவைத்து கைவரிசை காட்டி வந்துள்ளார்.