உலகின் ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கே உரிய கலாச்சாரமும், சிறப்பம்சங்களும் இருக்கும். இவை மற்ற நாடுகளிலிருந்து வேறுபட்டு, சற்றே வினோதமாக இருப்பதில் தான் சுவாரஸ்யமே. அந்தவகையில் இன்றுவரை அரசாட்சியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஓமன் நாடு குறித்த சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். கடந்த மூன்று நூற்றாண்டுகளாக அரபு தேசத்தை ஆட்சி செய்து வருகிறது அல் சயித் பரம்பரை. உலகின் நீண்ட அரசாட்சி புரிந்த மன்னர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கபூஸ் பின் சயித் அல் சயித் 1970 முதல் 2020 வரை சுல்தானாக ஆட்சி புரிந்துவந்தார். 2020ல் இவரது மரணத்திற்கு பிறகு இவரது சகோதரர் ஹைதம் பின் தாரிக் முடிசூடப்பட்டார்.
ஓமன் நாட்டின் கடைவீதிகள், அந்த அரபு தேசத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுகின்றன. கைவினை பொருட்கள் முதல், உணவு, ஆண்டீக் நகைகள், வீட்டு அலங்கார பொருட்கள் வரை இங்கு கிடைக்காத பொருட்கள் இல்லை. இந்த கடைவீதிகளை இவர்கள் சூக் என்று அழைக்கின்றனர். நிஸ்வா சூக், முத்ரா சூக், ஹீப்ரீ சூக் இவற்றில் பிரபலம்.
ஓமன் நாட்டில் உள்ள வீடுகள், கட்டடங்கள் எல்லாமே வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். பார்ப்பதற்கே கண்கொள்ளாக்காட்சியாக இருந்தாலும், பழக்கமில்லாதவர்கள் சென்றால், தங்களது இருப்பிடத்தை கண்டுபிடிப்பது கன்ஃப்யூஷனாகி விடும். அனைத்து வித அலுவலகங்கள், வீடுகள், கட்டடங்கள் என எல்லாமே வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். வெள்ளையை தவிர வேறு நிற பெயிண்ட்டை அடிக்கவேண்டும் என்றால், அரசிடம் முறையான காரணத்தைக் கூறி அனுமதி பெறவேண்டும்.
எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் பட்டியலில் ஓமானி தரவரிசை மிகவும் உயர்ந்தது. எண்ணை உற்பத்தி மற்றும் சுற்றுலா துறை ஓமனின் ஜிடிபிக்கு முக்கிய பங்களிக்கிறது. இவற்றில் இருந்து வரும் வருமானத்தையே அரசின் செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் அங்கு குடிமக்களுக்கு வரி விலக்கு உட்பட ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஓமானியர்களின் மதுபானம் என்றே அழைக்கப்படுகிறது இந்த மவுண்டெயின் டியூ குளிர்பானம். ஓமானிய சந்தையில், மவுண்டெயின் டியூவுடன் போட்டிபோடக் கூட வேறெந்த குளிர்பான பிராண்டும் இல்லை. அந்நாட்டு மக்கள் அளவுக்கு அதிகமாக விரும்பிப் பருகுவது மவுண்டெயின் டியூவைத்தான். கோகோ கோலா ஒரு முறை ஓமனில் கால்பதிக்க முயற்சித்தப்போது, இதுவரை எங்கும் அல்லாத நஷ்டத்தை அந்த நிறுவனம் சந்தித்துள்ளது. மவுண்டெயின் டியூவை தவிர வேறு எந்த குளிர்பானமும் அங்கு எளிதாக கிடைக்காது.
ஓமனின் கடுமையான ஷரியா சட்டம், அந்நாட்டில் குற்றங்கள் நடப்பதை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. குற்றத்தில் ஈடுபடுபவர்களை ஓமானிய போலீசார் கைது செய்து அரசிடம் ஒப்படைக்கிறது. இவர்களுக்கு கடும் தண்டனைகளும் வழங்கப்படுகிறது. தண்டனைகளுக்கு பயந்து, குற்றங்களில் ஈடுபடுபர்கள் இங்கு குறைவே. தவிர்க்கமுடியாத சூழலில் மட்டுமே இங்கு ஹாரன் அடிக்க வேண்டும். மற்ற சமயங்களில் வாகனங்கள் ஹாரன் அடிக்க இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹாரன் சத்தம் பொதுமக்களின் அமைதியை குலைக்கும் என்பதனால் இது எழுதப்படாத விதியாக ஓமனில் பின்பற்றப்படுகிறது.
ஓமன் நாட்டில் முக்கிய இடம் பிடித்திருக்கும் மற்றொரு பானம் காபி. வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு சாப்பிட வேறெதுவும் அளிக்காவிட்டாலும், கண்டிப்பாக காபி கொடுத்துவிடுவார்களாம். நட்பை, இருவருக்குள் உள்ள உறவை வலுப்படுத்த காபி உதவுகிறது என்பதனால், இதை ஒரு சம்பிரதாயமாகவே பின்பற்றி வருகின்றனர் ஓமன் மக்கள். காபி கொட்டைகளை ஓமனிலேயே விளைவிக்கின்றனர். மேலும் காபியுடன் சிறிது குங்குமப்பூவும் சேர்க்கப்படுகிறது. இதனால் இவர்களின் காபியின் சுவையும் கூடுகிறது!