Karnataka Bandh: பெலகாவியில் நடந்த மொழி மோதல் சம்பவத்தில், கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழக (KSRTC) ஓட்டுநர் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலுக்கு தாக்கியதை கண்டித்து, பல்வேறு கன்னட அமைப்புகள் இன்று 12 மணி நேரத்திற்காக முழு அடைப்பு (பந்த்) அறிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழக (KSRTC) ஓட்டுநர் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பல கன்னட அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், நகரின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று பெங்களூர் மக்களின் இயல்பு வாழ்க்கை காலை முதல் மாலை வரையில் பாதிக்கப்பட கூடும்.
பொதுப் போக்குவரத்து: பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (BMTC) மற்றும் KSRTC பேருந்து சேவைகள் இயங்காது. இருப்பினும், முழுமையான சேவை நிறுத்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், சில தனியார் டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்ஷா தொழிற்சங்கங்கள் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அவற்றின் சேவைகளும் பாதிக்கப்படலாம்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவித்துள்ளன. பெங்களுரில் முக்கிய மார்கெட் பகுதியான சிக்பேட், கே.ஆர். மார்க்கெட் மற்றும் காந்தி பஜார் போன்ற பகுதிகளில் உள்ள சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் மூடப்படலாம். போராட்டங்கள் தீவிரமடைந்தால், சில வணிக வளாகங்கள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களும் மூடப்பட வாய்ப்புள்ளது. அரசு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக ஊழியர்களின் வருகை குறையக்கூடும்.
பெங்களூரின் அடையாளமாக இருக்கும் நம்ம மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி சேவை இயங்காது. மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய சுகாதார சேவைகள் தடையின்றி செயல்படும். ரயில் மற்றும் விமான சேவைகள் திட்டமிட்டபடி இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், முக்கிய போக்குவரத்து சேவைகள் இயங்காது என்பதால் ரயில் நிலையத்திற்கும், விமான நிலையத்திற்கும் செல்வது கடுமையாகும்.
பெட்ரோல் பங்க், பால் விற்பனை நிலையங்கள் மற்றும் மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கும். ஆனால் சிறிய வணிகங்கள் மூடப்படலாம். Blinkit, Zepto மற்றும் Instamart போன்ற ஆப் சார்ந்த குவிக் காமர்ஸ் சேவைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் செயல்படும் என்று கூறப்படுகிறது.