நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று விளையாடுகிறது. இந்நிலையில், அந்த அணி இந்த முறை ஐபிஎல் கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு சிறப்பாக இருப்பதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17-வது சீசன், அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், 70 லீக் போட்டிகளின் முடிவில் 6 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில், நேற்று (மே 21) முதல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற்றது.
இதையடுத்து, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 4-வது இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும்.
இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் விராட் கோலியை நான் ஏலத்தில் எடுத்த போது இதை விட சிறந்த தேர்வை என்னால் எடுத்திருக்க முடியாது என நினைத்தேன். இந்த முறை ஆர்சிபி கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு சிறப்பாக அமைந்துள்ளதாக எனது உள்ளுணர்வு சொல்கிறது. முன்னோக்கி செல்லுங்கள். பெஸ்ட் ஆஃப் லக்” என தனது ட்வீட்டில் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ல் 111.6 மில்லியன் டாலர்களுக்கு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டுள்ள ஐபிஎல் அணியின் உரிமத்தை பெற்றார். கடந்த 2008-ல் விராட் கோலியை தனது அணிக்காக விஜய் மல்லையா வாங்கி இருந்தார். அப்போது யு19 இந்திய அணியை வழிநடத்தி உலகக் கோப்பை பட்டம் வென்ற கேப்டனாக கோலி இருந்தார். அவரை 30,000 டாலர்களுக்கு ஆர்சிபி அணி வாங்கியது. அது முதல் இந்த நாள் வரையில் கோலி, ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.