பொருளாதார ஆண்டின் கடைசி நாளான மார்ச் 31ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை வங்கிகளுக்கு பொருளாதார ஆண்டாக கணக்கிடப்படுகிறது. முதல் நாள் மற்றும் கடைசி நாளில் வங்கிகள் கட்டாயம் வேலை செய்யும். அந்த வகையில், இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி ஆண்டின் கடைசி நாளாகும். அன்று ஞாயிற்றுக்கிழமை வருவதால், வங்கிகள் செயல்படுவதற்கான வாய்ப்பில்லை என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, அரசின் செயல்பாடுகளுக்காகவும், பல்வேறு நிர்வாக காரணங்களுக்காகவும் மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது. வங்கிகளின் அனைத்து கிளைகளையும் மார்ச் 31ஆம் தேதி இயங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி, வங்கி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு வாடிக்கையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் வருமானவரித்துறை அலுவலகங்களும் மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த தினங்களில் வருமான வரி செலுத்துவோர், நேரடியாக வருமான வரி அலுவலங்களுக்கு வந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.