கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளுக்கு 2ஆம் மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதர சனிக்கிழமைகளில் அரைநாள் மட்டும் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வங்கி ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஊழியர்களின் கோரிக்கையை ஏற்ற இந்திய வங்கிகள் சங்கம், அதனை மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. இந்தக் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்தால், இந்தியாவில் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும். இந்த விடுமுறை அமலுக்கு வந்தால் பொதுத்துறை, தனியார், கூட்டுறவு, கிராமப்புறம் மற்றும் உள்ளூர் வங்கிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரையிலான வேலை நேரத்தில் மாற்றம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த நாட்களில், ஒவ்வொரு நாளும் சுமார் 1 மணி நேரம் வேலை நேரத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு பொது விடுமுறை என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவல், வங்கி ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.